top of page

இறுதியாய் ஒரு வேண்டுகோள்

  • Writer: ஸ்ரீ ராம் குமார்
    ஸ்ரீ ராம் குமார்
  • Apr 6, 2020
  • 1 min read

“உன்னை உனக்கு வெளியே

வந்து நின்று பார்,

உன் தவறுகள் புரியும்

உண்மையை உணர்வாய்”,

கல்லூரிப் பேராசிரியர் சொன்ன

விளங்காத வேதாந்தம்

விளங்கிறது இன்று.

உறையும் குளிர் இவ்வறையில்

எனினும் அதை உணர முடியவில்லை,

ஏனோ தெரியவில்லை

என்னால் என்னை விட்டு

தூரம் நகர முடியவில்லை ,

அறையின் வட கிழக்கு மூலையில்

தனியாய்ப் படுத்துக் கிடக்கும்

என்னையே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .

எது நம்மை என்ன செய்துவிடும்

என்ற ஏற்றம் இருந்தாலும் ,

பாதுகாப்பாய் தான் இருந்தேன்;

யார் மூச்சு பட்டதோ?

யார் தொட்டதைத் தொட்டேனோ?

எவர் என்மேல் உரசினாரோ?

எப்படியோ என் உள்ளே

நுழைந்துவிட்டது கோவிட் கிருமி .


பணியென வந்து

பக்கத்து ஊரிலே நான் சிக்கியதால்

நல்லவேளை என்

குடும்பத்துடன் நான் இல்லை .

நினைவில் இருப்பவை

நிதானம் சிந்தும் முன்

எஞ்சிய சில சம்பவங்கள் தான் .

இருமல் ஒரு நாள் அதிகமாகி

முச்சுத் திணறத் திணற நானே

ஆம்புலன்ஸை அழைத்தது;

ஆம்புலன்ஸ் வருவதற்கும் நான் நினைவிழப்பதற்கும்

இடையில் - இருந்த கால இடைவெளியில் ,

நான் இந்த சில நாட்களில்

சந்தித்தவரின் பட்டியல் எழுதி

சட்டைப் பையில் வைத்துக் கொண்டது;

மயக்க நிலையில் மருத்துவமனையில்

என் பொண்ணைப் பார்க்கனும்

என்று மருத்துவரிடம் அழுதது .

என்ன உடம்போ என் உடம்பு

மருத்துவமனையில் அனுமதியான

மூன்றாம் நாளே நான் இறந்துவிட்டேன் .


நாற்பத்திரண்டு வயது எனக்கு ,

என் குடும்பம்

நான் இல்லாமலே வாழுமளவு

சொத்தும் பணமும் எப்போதோ

சேர்த்துவிட்டேன்.

ஆனால் அவர்களின்

சொத்து, சந்தோசம், பலம்

அனைத்தும் நான் தான் - என்று

அவர்களுக்குத் தெரியும்

அது எனக்கும் தெரியும் .

மளிகை சாமான் மூட்டை போல்

என்னை பாலிதீன் பையில்

மூட்டை கட்டி விட்டனர்,

பிணவறை வாசலில்

என் மகள், மனைவி, அவளின் அண்ணன்,

யாரையும் என்னை நெருங்க அனுமதிக்கவில்லை,

முகத்தை மட்டும் காட்டி

தூரத்தில் இருந்தே

பார்த்துக் கொள்ள சொன்னார் அதிகாரி

என்னைப் பார்த்த சில நிமிடங்கள்

கல்லாய் உறைந்து போனாள்

என் மனைவி,

இறக்கும்போது கூட நான் பயக்கவில்லை

அவளை அப்படிப் பார்க்கும்போது – என்

ஆன்மாவும் பயந்து நடுங்குகிறது .

மகள் துடிக்கிறாள்

‘அப்பா’ ‘அப்பா’ என்று;

மனைவி கதறுகிறாள்

என்னை ஒருமுறையேனும்

தொட்டுப் பார்க்க,

நானோ அவர்கள் அருகில் தான்

ஆன்மாவாய் நிற்கிறேன் .

சில நேரத்திலேயே

என் உடலை வண்டியில் ஏற்றுகின்றனர்;

சாம்பலை பத்திரமாய் ஒப்படைப்போம்

என்று சத்தியம் செய்து,

என் குடும்பத்தை கட்டாயப்படுத்தி

வெளியே அனுப்பிவிட்டனர்.

தத்துவங்களில் நம்பிக்கை இல்லை எனக்கு

வாழ்வைப் பற்றியோ

சாவைப் பற்றியோ

பெரிதாய் நான் கவலைப்பட்டதில்லை ,

'இதுவரை' .


என்றோ ஓர் நாள்

எல்லோரும் சாகத் தான் போகிறோம்,

ஆனால் இப்படி ஒரு சாவு வேண்டாம் .

நம் குடும்பம்

நம்மைத் தொடக்கூட முடியாத

சாவு யாருக்குமே வேண்டாம் .

என் குரல் கேட்குமோ கேட்காதோ!

எல்லா செவிகளுக்கும்

என் இறுதியான ஒரே ஒரு வேண்டுகோள்

பத்திரமாய் இருங்கள்;

கவனமாய் இருங்கள்;

வீட்டினுள்ளேயே இருங்கள்;

என்னைப் போல் இந்தக் கிருமியிடம்

தவறியும் சிக்கிவிடாதீர்கள்.



Comments


Join my mailing list

Thanks for submitting!

bottom of page