top of page

அரண்

  • Writer: ஸ்ரீ ராம் குமார்
    ஸ்ரீ ராம் குமார்
  • Nov 25, 2019
  • 4 min read

மாலை 7.30 மணி

30-திசம்பர்-2018

அகமெதாபாத்

"அபி, கீழ இறங்கி வா" பாதி படிக்கட்டுகள் மட்டும் ஏறி வந்து நின்று கொண்டு, மொட்டை மாடியில் நின்ற மகளை அழைத்தாள் தியா .


"நான் வரல மீ "


"சொன்னா கேளு அபி, ஒழுங்கா கீழ இறங்கி வா !"


"ஐயோ என்ன கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுரீங்களா... என்னால முடியல ", திரும்பிப் பார்க்காமல் கத்தினாள் அபி.


தியா மீதி படிக்கட்டுகளையும் ஏறி மேலே வந்தாள் . அபியின் அருகில் வந்து அவள் தோள்களில் கை வைத்து "அப்பா ஒத்துக்கிட்டாரு" என்றாள் .


பல நாட்கள் கடலில் காத்திருந்தும் மீன் சிக்காத மீனவன் போல் வாடிக் கிடந்த அபியின் முகம் , தியா சொன்னதைக் கேட்டதும், பளீரென்று பிரகாசித்தது.


"நிஜமாவா மீ ?"


"சத்தியமா " என்று சிரித்தாள் தியா.

 


காலை 6.00 மணி

31-திசம்பர்-2018

அகமெதாபாத்


காலையின் வெளிச்சம் அப்போது தான் எழலாமா இல்லை இன்னும் ஒரு ஐந்து நிமிடம் தூங்கலாமா என யோசித்துக் கொண்டிருந்த நேரம்.


தேவ் தூக்கத்திலிருந்து விழித்து கண்களை கசக்கிக் கொண்டே , விளக்கு எரிந்து கொண்டிருந்த தன் மகளின் அறை நோக்கி நடந்தான்.


"பேபி என்ன டா, ப்ளூ லோபர் எடுக்காம, ப்ளாக் எடுத்து பேக் பண்ற .... ?" துணிகளை மடித்து பையில் வைத்துக் கொண்டே கேட்டாள் தியா.


"இல்ல மீ . . . இது இப்போ தான வாங்கணோம் நான் இதையே எடுத்துக்கறேன் ", லோபரை அதன் பெட்டியில் போட்டு அதை ஒரு தடிமனான பாலிதீன் பையில் போட்டு தனியே எடுத்து வைத்தாள் அபி.


"மீ . . . கிலிஸ்ரின் எடுத்து வச்சியா ?"


"ம்ம்ம் "


"ஐ லைனர் ? "


"வச்சிட்டேன் ."


"கூலர்ஸ் ? "


"வச்சாச்சு ."


"என்னோட பிங்க் டாப் ?"


"இனிதான் வைக்கணும் ."


"என்ன மீ அதைத்தான மொதல்ல எடுத்து வைக்க சொன்னேன், இன்னும் என்ன பண்ற ," தலையை சீவிக்கொண்டிருந்தவாரே தியாவை வார்த்தையால் கடித்தாள் .


"ஏய் ! நீ சொன்ன எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு . எல்லாத்தையும் நான் எடுத்து வச்சுக்கிறேன் . நீ நச நசன்னு பேசாம தலையை மட்டும் வாரு ." தியாவும் தன் பங்குக்கு கடித்தாள்.


அவர்கள் இருவரும் பரபரப்பாய் இருக்க , நடந்த அனைத்தையும் அமைதியாய் கதவு நிலையில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் தேவ் . அந்த அமைதி ஒரு பிரளயத்திற்கு பின் வந்த அமைதி . முந்தைய நாள் வீட்டில் தந்தைக்கும் மகளுக்கும் பெரிய வாக்குவாதமே நடந்தது . அப்போதிருந்து இப்போது வரை அபியும் தேவும் பேசிக்கொள்ளவே இல்லை . கேட்பதற்கு சிறிய இடைவெளியாய் தெரிந்தாலும் அபியும் தேவும் வீட்டில் இருக்கும் போது இத்தனை நேரம் பேசாமல் இருந்தது மிகக் குறைவு.

 


அபி என்கிற அபிராமசுந்தரி , தேவுக்கும் தியாவுக்கும் பிறந்த ஒரே மகள். பதினாறு வயது பள்ளி மாணவி, நன்றாக நடனம் ஆடுவாள். தனியாக நடனப் பள்ளியில் பயின்றும் வருகிறாள். அவர்கள் நடனப் பள்ளியில் பயிலும் சிறந்த மாணவர்களை வைத்து நடன ஆசிரியர் ஒரு குழுவையும் அமைத்திருந்தார் . அந்த நடனக் குழு பல போட்டிகளில் கலந்தும் வென்றும் உள்ளது. அந்தக் குழுவில் மட்டுமல்ல போட்டிகளில் குழு வெற்றி பெற்றதிலும், அபிக்கு பெரிய பங்கு உண்டு .


தன் குழு புதுவருடப் பிறப்பையொட்டி மும்பையில் நடைபெறும் பிரம்மாண்டமான ஒரு நடனப் போட்டியில் கலந்து கொள்ளப் போவதாகவும் தானும் செல்ல வேண்டும் என்றும் தேவிடம் அனுமதி கேட்டிருந்தாள் அபி .


ஜனவரி 5ஆம் தேதி தேவின் அம்மா அப்பாவிற்கு ஐம்பதாவது திருமண நாள் விழா, தேவ், தியா, தேவின் அண்ணன், தேவின் அக்கா என அனைவரும் அன்றைய தினத்தை மிகப் பிரம்மாண்டமாய்க் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்கள். முன்னரே ஊருக்குச் செல்ல விமான சீட்டுகளையும் பதிவு செய்துவிட்டார்கள் தேவும் தியாவும் .


ஆனால், இதற்கிடையில் அபி இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட தேவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை . போட்டிக்கு செல்ல வேண்டாம் என்று மறுத்துவிட்டான்.

பல விஷயங்களில் தேவும் அபியும் சண்டை போட்டிருக்கிறார்கள் . ஆனால் ஒரு முறை கூட நடனம் தொடர்பானவற்றில் , தேவ் அபி கேட்டு மாட்டேன் என்று சொன்னதில்லை . அவ்வாறு சொன்னது இதுவே முதன்முறை .


இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் , தேவிற்கு கோபம் ஏறிக்கொண்டே சென்றது . கடைசியாய் ஒரு முறை பொறுமையாய் எடுத்து சொல்லலாம் என நினைத்து, அவளைப் பார்க்காமல் திரும்பி நடந்து கொண்டே விளக்க ஆரமித்தான் . அபி எதையும் கேட்கத் தயாராய் இல்லை . தனக்கு எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம், தான் போட்டிக்குச் சென்றே ஆக வேண்டும் என்று கத்திக்கொண்டே தேவை நெருங்கினாள் அபி. தேவ் பொறுமையிழந்து கோபத்தில் வேகமாய்த் திரும்ப, அவன் கை தவறி அபியின் கன்னத்தில் பட்டது . அவன் கை முரடான கை, வேகத்தில் கொஞ்சம் ஓங்கியே பட்டது.


அபி ஒன்றுமே பேசவில்லை, கண்களில் நீர் மட்டும் தாரை தாரையாய்க் கொட்டியது . ஒன்றும் பேசாமலே திரும்பி வேகமாய் நடந்து மொட்டை மாடிக்கு சென்றுவிட்டாள் . தேவ் நடந்த சம்பவத்தால் திகைத்து நின்றுவிட்டான் . பின் தியா யோசனை ஒன்று சொல்லி, போட்டிக்கு அனுப்ப வற்புறுத்தியதாலும், அடித்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியாலும் அபி மும்பை செல்ல சம்மதித்தான் தேவ் .

 


"டிக்கெட் எடுத்து வச்சுட்டியா அபி ? " கதவில் சாய்ந்திருந்தவாரே தேவ் கிளம்பிக்கொண்டிருந்த அபியிடம் கேட்டான்.


அபி ஒன்றுமே சொல்லவில்லை . ஒரு நிமிட மௌனம் .


"வச்சாச்சு தேவ்" தியா பதிலளித்தாள் .

"வாட்ச் கட்டல ? இங்க இருக்கு பாரு , நான் எடுத்து தரேன் ." மேசையில் இருந்த கைக்கெடிகாரத்தை எடுத்துக் கொடுத்து ராசியாகி விடலாம் என்று எண்ணி எடுக்கச் சென்றான் .


அவன் தொடுவதற்குள் அதை எடுத்துக் கொண்டு படுக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள் அபி. தேவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது .


மீண்டும் நிதானித்துக் கொண்டு, "தியா சோனி வந்துட்டாரு போல, வாசற் கதவு தொறந்திருக்கு ", என ஏதுமே நடக்காதது போல கார் ஓட்டுநர் பற்றி தியாவிடம் கேட்டான் .

"ஆமா டா ! காலைல 5.30 மணிக்கே வந்துட்டாரு ."


"டீ ஏதும் குடுத்தியா ?"


"குடுத்துட்டேன் டா, டெய்லி செய்றது தான. அவரு வந்ததுமே டீ போட்டுக் கொடுத்துட்டேன்."


"அப்போ எனக்கு டீ தரல ! " உரிமை மறுக்கப்பட்டது போல் பாவமாய்க் கேட்டான் தேவ் .


"இரு டா , இவ கிளம்பிக்கட்டும், நாம அப்புறம் குடிப்போம் ", பாசமாய்க் கூறினாள் .


தேவ் மீண்டும் அபி பக்கம் திரும்பினான், "பெர்மிசன் கொடுத்தும் கோவம் பொகலையா ?"


அபி பதில் சொல்லவில்லை .


"என்கிட்ட பேச மாட்டியா ?"


"ஆமா ! " இதற்கு மட்டும் வேகமாய் பதிலளித்தாள் .


"பேபி, நான் தாத்தா பாட்டி ஃபங்க்சன்காக தான டா சொன்னேன் ."


"அப்பா, நான் தான் காம்பெடிஷன் முடிச்சதும் ஃபங்க்சன் வந்துடுவேன் சொன்னேன்ல . அப்புறமும் நீங்க சண்ட தான போட்டீங்க . "


"ஆனா, நாங்க நாளைக்கு கெளம்பிடுவோம் . நீ தனியா எப்டி டா வருவ ... அந்த பயம் தான் அப்பாவுக்கு . "


"தேவ், திரும்ப மொதல்ல இருந்து ஆரமிக்காத , அதான் இவள என் பிரென்ட் சங்கர் பேமிலி கூட வர சொல்லிட்டோம்ல . விடு " மறித்து நிறுத்தினாள் தியா .


"ஆமா! ஆமா! சங்கரோட வரட்டும் . ஆனா இவ ஏன் இன்னும் என் கூட பேச மாட்டேங்கிறா ?"


"பேசிட்டிருக்கப்போவே அறையறாரு , அப்போ எப்படி பேசுவேன்னு கேளு மீ ! "


"அபி .... " என தியா எதோ ஆரம்பிக்க , மெத்தையில் அமர்ந்திருந்த மகளின் அருகில் சென்று தரையில் மண்டியிட்டான் தேவ் .


அபியின் இரு கன்னங்களையும் தன் உள்ளங்கைகளில் ஏந்திக் கொண்டான் . அவன் இடது விழியில் ஒரு துளி நீர் வழிந்தது .


" அப்பா உன்ன அடிக்கணும்னு அடிச்ருப்பேனா டா ? தெரியாம கை பட்டிருச்சு டா...." வேதனையோடு கூறினான் .


அபி அவன் கைகளை எடுத்து விட்டுவிட்டு, " நான் வரேன் பா, விடுங்க" என்று கூறி வாசல் நோக்கி நடந்தாள் .


மண்டியிட்டவாரே அவன் தரையில் அமர்ந்துவிட்டான் . ஒரு துளி வழிந்த கண்களில் நீர் குளமாய்ப் பெருகியது .

பத்து வினாடிகள் கழித்து, அவனை ஓர் மெல்லிய உருவம் ஓடி வந்து கட்டிப் பிடித்தது . அது அபி தான் .


கட்டிப் பிடித்தவாரே தேவின் கன்னத்தில் முத்தமிட்டாள் அபி, "நீங்க வேணும்னு அடிக்கலன்னு எனக்கு தெரியும் பா . . . அண்ட் நீங்க வேணும்னே அடிச்சாலும் நான் வாங்கிப்பேன் பா ! " என சிரித்தாள் .


தேவ் அவளை வாரி அணைத்துக் கொண்டான் . சோகக் கண்ணீர் சில நொடிகளில் ஆனந்தக் கண்ணீராய் மாறியது.

 

காலை 8.00 மணி

31 - திசம்பர் - 2018

அகமெதாபாத் இரயில் நிலையம்

ஓட்டுனர் 'சோனி'யை நடைமேடை வரை மட்டும் அழைத்து வந்துவிட்டு பின் தானே எறிக் கொள்வதாய் சொல்லி அனுப்பி வைத்தாள் அபி .


எஸ் 4 (S4 ) பெட்டியில் ஏறி உள்ளே செல்லாமல் , படியிலேயே நின்று கொண்டாள். இரயிலின் முன்பக்கமும் பின்பக்கமும் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள் .


"சில நிமிடங்களில் இரயில் கிளம்பும் ", என அறிக்கை வர பரபரப்பாய் சுற்றியும் முற்றியும் பார்க்கத்தொடங்கினாள் .


"வீ ஆர் ஹியர் அபி, அங்க எங்க பாக்கிற", என முன்னே வந்து நின்றனர் ராகவும் ஷெர்லினும் .


"வந்துட்டீங்களா ! ", அபியின் முகத்தில் ஒரே மகிழ்ச்சி .


"என்ன அபி உண்மையிலேயே பாம்பே போகலாம்னு நெனச்சுட்டியா ?" நக்கலாய்க் கேட்டான் ராகவ் .


"நீங்க வேற ப்ரோ, டிரைவர் அங்கிள் நான் ட்ரெயின் ஏறலைன்னு பாத்துடுவாரோன்னு நானே பயந்து போயிருக்கேன், நீங்க என்னடானா கிண்டல் பண்றீங்க ." அபி சலித்துக் கொண்டாள் .


மூவரும் இரயில் நிலையம் விட்டு வெளியேறத் தொடங்கினர் .


"கார் எங்க இருக்கு ?" அபி கேட்டாள் .


ராகவ் "பேக் எண்ட்ரன்ஸ்ல " என்றான் .


"அப்பாக்கும் அம்மாக்கும் ஏதும் டவுட் வரலையே ? " பயமும் அக்கறையும் கலந்து அபியிடம் கேட்டாள் ஷெர்லின் .


"இல்ல, அவங்க நான் பாம்பேக்கு போறேன்னு தான் நெனச்சுடருக்காங்க . "


தொடரும் . . .
 

Comments


Join my mailing list

Thanks for submitting!

bottom of page